முள்ளம்பன்றி தாக்கியதால் மரணம்; ஒருவாரமாக பெண் புலி உணவு சாப்பிடாதது அம்பலம்: உடல்கூறு ஆய்வில் தகவல்

நாகர்கோவில்: பேச்சிப்பாறை பகுதியை அடுத்த மலைகிராமமான ஆண்டிபொத்தை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (28). அன்னாசி விவசாயம் செய்து வருகிறார். குலசேகரம் அருகே சேக்கல் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு செல்வதற்காக நேற்று காலை பைக்கில் சென்றார். அப்போது மலையில் இருந்து வந்த புலி ஜெகன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இதில் ஜெகன் படுகாயம் அடைந்தார்.

பைக் மீது புலி மோதியதால் புலியும் கீழே விழுந்தது. பின்னர் புலி அங்கிருந்து தப்பிச்சென்றது. அங்கிருந்து சென்ற புலி சாஸ்தா கோயில் பின்பக்கம் தனியார் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த தோட்டத்தில் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை திட்டவிளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (61) பணியில ஈடுபட்டிருந்தார். திடீரென புலி பூதலிங்கத்தை தாக்கியது. இதில் பூதலிங்கமும் படுகாயம் அடைந்தார். உடனே அவரது அலறல் சத்தகம் கேட்டு மற்ற தோட்டத்தில் பணியில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அதற்குள் புலி அங்கிருந்து தப்பிச்சென்றது. ஆனால் புலி சிறிது தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து இறந்தது. படுகாயம் அடைந்த ெஜகன், பூதலிங்கம் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்தது பெண் புலி என்பது தெரியவந்தது. புலியின் முகம், வாய் பகுதிகளில் முள்ளம் பன்றியின் முட்கள் இருந்தது. இதனால் முள்ளம்பன்றி தாக்கியதில் இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். பின்னர் முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புலியினை உடற்கூறு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் முள்ளம்பன்றி தாக்கியதில் புலி இறந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து புலியின் உடல் வனத்தில் எரியூட்டப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புலிகள் தனிமையில் வாழக் கூடியது. இனச்சேர்க்கையின்போது மட்டுமே ஆண், பெண் புலி ஒன்றாக இருக்கும். அதன்பிறகு பிரிந்துவிடும். புலி தனது வாழ்வாதாரத்தை ஒரு எல்லை நிர்ணயம் செய்து வாழும். அதற்குள் மற்ற புலிகளை உள்ளே விடுவது இல்லை.

அந்த வகையில் இறந்த புலியை வேறு புலி விரட்டிவிட்டு இருக்கும். அதற்கான எல்லையையும், உணவையும் தேடி அலைந்தபோது தான், முள்ளம் பன்றியை அந்த புலி வேட்டையாடியுள்ளது. முள்ளம் பன்றியின் கூர்மையான முட்கள் புலியின் முகம், வாய் பகுதியை தாக்கியுள்ளது. இதனால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்து உள்ளது. முள்ளம் பன்றியின் மூட்கள் குத்தியதால் கடந்த ஒரு வாரகாலமாக அந்த புலி எந்த வித உணவையும் உட்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளது. இதனால் உடல் சோர்வாக இருந்துள்ளது. மேலும் வனத்தில் இருந்து பல கிலோ மீட்டர் புலி கடந்து வந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்தது என்றனர்.

The post முள்ளம்பன்றி தாக்கியதால் மரணம்; ஒருவாரமாக பெண் புலி உணவு சாப்பிடாதது அம்பலம்: உடல்கூறு ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: