8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு

செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடியும், கோடை வெப்பத்தை தாங்க முடியாமலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக – கேரள எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை பகவதிபுரம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பம்பு செட் அருகே சுமார் 25 வயதுடைய ஆண் யானை முகாமிட்டது. இதைப் பார்த்த விவசாயிகள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினரும், விவசாயிகளும் சேர்ந்து யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு யானை நகராமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரமாக ஒரே இடத்தில் யானை முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானை ஏதேனும் நோய்வாய்ப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாக நெல்லை மண்டல வனவிலங்கு மருத்துவர் மனோகரன் பரிசோதனை செய்தார். இதைதொடர்ந்து யானைக்கு சத்து மாவு, உணவு குடிநீர் வழங்கினார். ஆனால் யானையின் வாய்பகுதியில் பெரிய அளவிலான புண் ஏற்பட்டிருந்ததால் யானை உண்ண முடியாமல் அங்கேயே நின்றது.

இதனால் வேறுவழியின்றி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் அதே இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். இந்த சூழலில் நள்ளிரவில் யானை உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

* மின்சாரம் பாய்ந்து 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட யானை சாவு
திண்டுக்கல் மேற்கு தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட தோனிமலை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரம் வனப்பகுதி வழியாக கொண்டு வரப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி இவ்வனப்பகுதி வழியாக வந்துள்ளது. அப்போது தோனிமலை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சுமார் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்து விட்டது.

The post 8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: