கத்திரி வெயிலின் தாக்குதல் தொடக்கம்: இணையத்தை கலக்கும் வெயில் மீம்ஸ்கள்

சென்னை: தமிழகத்தில் காலநிலை மாற்றம் என்பது ஒரு புரியாத புதிராகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் மழை வராமல் குளிர்காலத்தில் மழை பொழிகிறது. அதோடு மழை வந்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கோடைகாலத்தில் வெயில் அடித்தால் வரலாறு காணாதவாறு வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்படி இயற்கைக்கு முரணான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் சதம் அடிக்கிறார்களோ இல்லையோ தினசரி 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் சதம் போடுகிறது. பொதுவாக, மழைக்காலத்தை கூட சமாளித்து விடும் மக்கள் வெயில் காலம் வந்தால் புலம்புவது தான் இயல்பாக உள்ளது. இதற்கான காரணம், மழையில் குடைபிடித்தோ, ரெயின் கோட் போட்டோ வெளியில் செல்லலாம். ஆனால், வெயில் அப்படியில்லை. வீட்டிலிருக்கும் போதும் சரி, வியர்வை, கசகசப்பு, எரிச்சல் என படுத்தி எடுத்து விடுகிறது.

அதன்படி, இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதலை தொடங்கிய வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடைகாலத்தில் பாதுகாப்பாக இருக்க அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் எந்தவித தடைகளும் வராதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வெயில் காரணமாக வரக்கூடிய வேரிசல்லா என்னும் வைரஸ் மூலம் பரவும் சின்னம்மை, ஹீட் ஸ்ட்ரோக், மஞ்சள் காமாலை, வியர்க்குரு, நீரிழிவு பிரச்னை உள்ளிட்ட உடல் சார்ந்த நோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்க மருத்துவர்களும் தங்களின் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இந்நிலையில், கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. இதுபோன்ற ஹாட்டான காலகட்டத்திலும் நம்மை கூலாக வைக்க மீம் கிரியேட்டர்களால் அக்னி நட்சத்திரத்தையும் அதன் அனல் பறக்கும் வெப்பத்தையும் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்யும் நிகழ்வுகள் சமூகவலைதளங்களில் நிரம்பி காணப்படுகின்றன.

ஏற்கனவே, கடந்த முறை தொடர்ந்து பெய்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என வடமாவட்டங்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு இதுவரை இல்லாத வகையில் பொழிந்ததை இணையதளவாசிகள் மீம்ஸ்களை போட்டு நகைச்சுவை பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற செயலிகளில் வெயில் குறித்து பதியப்படும் மீம்ஸ்கள் இணையத்தில் சக்கைபோடு போடுகின்றன.

குறிப்பாக, அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில் இந்த வெயிலுக்கு நீர்சத்து பொருட்களான இளநீர், மோர் விற்பனை படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை குறிப்பிட்டு 23ம் புலிகேசி திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சியான உற்சாக பானம் தயாரிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மோர், இளநீர் ராக்; அக்காமாலா, கப்சி ஷாக் என மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல், வெயிலுக்கு குளிக்க போனா தண்ணி கூட சூடா தான் வருதுடே, கொஞ்சமாச்சும் இரக்கம் காட்டு தெய்வமே என பல மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதுதவிர கோடைகால வெயின் தாக்கம் குறித்தும் மக்கள் படும் நிலைகள் குறித்தும் நகைச்சுவை வாய்ந்த மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post கத்திரி வெயிலின் தாக்குதல் தொடக்கம்: இணையத்தை கலக்கும் வெயில் மீம்ஸ்கள் appeared first on Dinakaran.

Related Stories: