சென்னையில் கத்திரி தொடங்கிய முதல்நாளான நேற்று வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்

* பஸ், மின்சார ரயில் பயணிகள் கடும் அவதி, முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

* மாலை நேரத்தில் கடற்கரை, பூங்காக்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரலில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரலில் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் காலை 11 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர். ஈரோடு, கரூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுக்கிறது.

வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இது 28ம் தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்திரி தொடங்கிய முதல் நாளிலேயே பல மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணி முதல் வெயில் கொளுத்தியது. காலை 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 11 மணிக்கு மேல் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு சுட்டெரித்தது.

வெளியில் நடந்து சென்றால் மயக்கம் அடையும் அளவுக்கு உக்கிரமாக இருந்தது. சிறிது நேரத்திலேயே உடல் முழுவதும் வியர்த்து ஆடை முழுவதும் ஈரமானது. பஸ், ரயில்களில் சென்றவர்கள் அனலின் கொடுமையால் கடும் அவதிக்குள்ளாகினர். இருக்கையில் உட்கார முடியாதபடி சூடாக இருந்தது. குடை பிடித்தால் மட்டுமே வெளியில் செல்லலாம் என்ற அளவில் சென்னையில் நேற்று வெயில் தாக்கம் இருந்தது.

நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம். விடுமுறையை அனுபவிக்க வெளியில் செல்ல முடியாமல் வெயிலால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். பிற்பகல் வேளையில் சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருந்தன. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க சாலையோரங்களில் தர்பூசணி, கிர்ணி, சாத்துக்குடி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை மக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் 104.36 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 100.58 டிகிரி செல்சியசும் வெயில் பதிவானது. காலை முதல் வெயில் கொடுமையால் சிக்கி தவித்த மக்கள் இயற்கை காற்றை அனுபவிக்கவும், பொழுதை போக்கவும் மாலை நேரத்தில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்தனர். இதனால், மாலை 5 மணிக்கு மேல் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.

நேரம் ஆக, ஆக கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. இரவு 9 மணி வரை கடற்கரையில் பொழுதை போக்கிய பின்னரே வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதே போல சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் அங்கேயே கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் கத்திரி தொடங்கிய முதல்நாளான நேற்று வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: