சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார் அம்மன்; உடுமலையில் நடைபெற்று வரும் தேரோட்டத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

உடுமலை :திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத தேர் திருவிழா இங்கு 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர் திருவிழாவுக்கான நோன்பு சாட்டுதல் ஏப்ரல் 15-ம் தேதி இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

16-ம் தேதி மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கம்பத்துக்கு பெண்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.18-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொடியேற்றம், பூவோடு ஆரம்பம் நடைபெற்றது.

நாள்தோறும் அம்மன் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. திருக்கோயில் வளாகத்திலும், குட்டை திடலிலும் கலை நிகழ்ச்சிகளும் பக்தி இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றன. நேற்று அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு, மாலை 4 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (25-ம் தேதி) காலை 6.45 மணிக்கு சூலத்தேவருடன் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட தேரில் உப்பு தூவி வழிபட்டனர்.

மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆதீனகர்த்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் பெரியகடை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை, பழனி சாலை, பொள்ளாச்சி சாலை வழியாக இரவு நிலையை வந்தடைகிறது.

தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலையில் குவிந்துள்ளனர். உடுமலை நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை இரவு 10 மணியளவில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.

27-ம் தேதி காலையில் கொடி இறக்கம் மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டம், இரவு பூம்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகியவற்றுடன் திருவிழா நிறைவடைகிறது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

The post சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார் அம்மன்; உடுமலையில் நடைபெற்று வரும் தேரோட்டத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: