கொல்கத்தா: ஹவுரா மற்றும் காமாக்யா இடையே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலில் விரைவில் அசைவ உணவும் சேர்க்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி ஹவுரா மற்றும் காமாக்யா இடையேயான வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் கடந்த 22ம் தேதி அசாமின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா ரயில் நிலையத்தில் இருந்தும் அடுத்த நாள் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்தும் தனது வழக்கமான வணிக சேவையை தொடங்கியது.
ஹவுரா-காமாக்யா இடையே வாரத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த இரவு நேர ரயிலில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவதாக சில பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ஒரு வாரத்திற்குள் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் உணவுப்பட்டியலில் அசைவ உணவு வகைளும் சேர்க்கப்படும்.மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநில மக்களும் பெரும்பாலும் அசைவ உணவு உண்பவர்கள். அத்தகைய சுவையான உணவுகள் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலில் வழங்கப்படும்” என்றார்.
