மைஹர்: மத்தியப்பிரதேசத்தில் குடியரசு தின மதிய உணவு பழைய பேப்பரில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வீடியோ வைரலாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் உள்ள பதிக்வானில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு குடியரசு தின சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த உணவு மாணவர்களுக்கு தட்டுகளில் பரிமாறப்படவில்லை. மாறாக பழைய பேப்பர் மற்றும் நோட்டு புத்தகங்களில் இருந்து கிழிக்கப்பட்ட பேப்பரில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்கள் தரையில் அமர்ந்து பேப்பரில் வைத்து அல்வா-பூரியை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரித்தார். மேலும் இது குறித்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு உயர்நிலைப்பள்ளியின் பொறுப்பு முதல்வர் இடைநீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
