லக்னோ: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), கடந்த 13ம் தேதி உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதில் பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைய ‘சமத்துவக் குழு’ அமைப்பது மற்றும் 24 மணி நேர உதவி மையம் அமைப்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவு குறிப்பாக பிராமண மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் அளிக்கவில்லை என்றும், இது ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தர பிரதேச மாநிலம் பரேலி நகர துணை ஆட்சியர் அலங்கார் அக்னிஹோத்ரி, இந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அவரை உத்தரபிரதேச அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் வரை ஷாம்லி மாவட்ட அலுவலகத்தில் அக்னிஹோத்ரி தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று அக்னிஹோத்ரி கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதற்கிடையே அக்னிஹோத்ரி மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
* டெல்லியில் போராட்டம்
யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முழுவதும் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு நேற்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக திரும்பப் பெறுவது உட்பட கோரிக்கைகளின் பட்டியலை அந்தக் குழு யுஜிசியிடம் சமர்ப்பித்தது.
