திருவனந்தபுரம்: புதுமுக இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் சமீபத்தில் நரிவேட்டை என்ற மலையாளப் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்கு அடுத்து அனுராஜ் மனோகர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை சபரிமலையில் பம்பை, சன்னிதானம் உள்பட பகுதிகளில் வைத்து நடத்த இவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் சபரிமலையில் வைத்து படப்பிடிப்பு நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி மறுத்தது. இதை மீறி சபரிமலையில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க விஜிலன்சுக்கு தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் உத்தரவிட்டார். இந்நிலையில் இயக்குனர் அனுராஜ் மனோகர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அனுமதியின்றி பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
