புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோயில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள கருவறைக்குள் சென்று வழிபட விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இதையடுத்து இந்த நடைமுறையை மாற்றி அனைவருக்கும் கருவறை வரையில் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு அனைத்து மக்களும் ஒரே வகையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக கூறி தர்பன் அவஸ்தி என்பவர் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘கோயில் கருவறைக்குள் யாரை அனுமதிக்க வேண்டும்? யாரை அனுமதிக்க கூடாது? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை கிடையாது. எனக் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்தனர்.
