புதுடெல்லி: ஷாஹீன் மாலிக் எனும் பெண் கடந்த 2009ம் ஆண்டு ஆசிட் வீச்சு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மீது ஆசிட் வீசியவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஹாசீன் மாலிக் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கிடப்பில் உள்ளதாகவும், குறிப்பிட்ட மனு மீது விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீலின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘ஹாசீன் மாலிக்கிற்கு சட்ட ரீதியிலான உதவிகளை வழங்க வேண்டும்.
ஆசிட் வீச்சு சம்பவங்கள் குறித்த வழக்குகளின் நிலவரம் குறித்த விரிவான தகவல்களை நான்கு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ஆசிட் வீச்சு விவகாரத்தில் குற்றவாளியின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு அதனை ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இழப்பீடாக வழங்க கூடாதா?. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில சட்டமன்றங்களின் தலையீடு தேவைப்படலாம். குறிப்பாக வரதட்சனை கொடுமைகளால் ஏற்படும் மரணத்திற்கு ஈடானது, ஆசிட் வீச்சு பாதிப்பு ஆகும். எனவே அதற்கு ஈடான தண்டனைகளை ஆசிட் வீச்சு குற்றவாளிக்கும் வழங்க பரிசீலிக்கலாம். இதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
