மகாத்மா வேலை உறுதி திட்ட பெயர் நீக்க விவகாரம் மோடி அரசு நாட்டை மீண்டும் மன்னர் காலத்திற்கு தள்ள முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசு நாட்டை மீண்டும் மகாராஜாக்கள்,மன்னர்களின் சகாப்தத்திற்குள் தள்ள முயற்சிக்கிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதையும் புதிய திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை எதிராகவும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுடன் சமீபத்தில் நடத்திய உரையாடலின் வீடியோவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,மோடி ஜி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை அழிக்கும் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தில் பேரம் பேசும் உரிமையை பறிக்கவும், பஞ்சாயத்துக்களின் அதிகாரத்தை பறித்து அவர்களின் கைகளை கட்டவும் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து டெல்லியில் அதிகாரத்தை மையப்படுத்தவும், அனைத்து அதிகாரமும் செல்வமும் ஒரு சிலரின் கைகளில் குவிக்கும் வண்ணம், நாட்டை மீண்டும் மகாராஜாக்கள், மன்னர்களின் சகாப்தத்திற்குள் தள்ள ஒன்றிய அரசு விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தொழிலாளி இந்த அரசாங்கம் தொழிலாளர்களை அடிமைப்படுத்துகிறது என்று ராகுல் காந்தியிடம் கூறுவதை காணலாம். குறைந்தபட்ச ஊதியம், ஆண்டு முழுவதும் வேலைக்கான உத்தரவாதம், சுதந்திரத்துடனும், கண்ணியத்துடனும் வேலை செய்ய உரிமை இவை தான் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே குரலில் அறிவித்தனர்.100 நாள் வேலை திட்டம் தங்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்கியது என்று அவர்கள் ராகுலிடம் கூறுவதை கேட்க முடிகிறது.

Related Stories: