பிப்.1ல் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விபி ஜி ராம் ஜி, எஸ்ஐஆர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான 28ம் தேதி ஜனாதிபதி உரை நடைபெறும் நிலையில், குடியரசு தினவிழாவில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நாளான 29ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் கூட்டம் நடைபெறாது. வரும் 30ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 13ம் தேதி வரை முதற்கட்ட கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளும் இடையூறின்றி சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய அரசு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாஜ, காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது, கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான விவாதங்களுடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது விபி ஜி ராம் ஜி சட்டம் மற்றும் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிராகரித்தது. நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்தும் ஏற்கனவே இரு அவைகளும் விவாதித்துவிட்டதாகவும், எனவே மீண்டும் விவாதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஆனால் ​​காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பட்ஜெட் அமர்வுக்கான அரசாங்க விவகாரங்களை வெளியிடாததற்கு அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், வெளியுறவுக் கொள்கை விஷயங்கள், காற்று மாசுபாடு பிரச்சினை, பொருளாதாரத்தின் நிலை, இளம் பருவத்தினருக்கு சமூக ஊடகங்களுக்கு தடை போன்ற பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க விரும்பினர். ஆனால் ஜனாதிபதியின் உரை மற்றும் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இவற்றை எழுப்பலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,’இது ஆண்டின் முதல் அமர்வு. பொதுவாக, ஜனாதிபதியின் உரைக்குப் பிறகு அரசாங்க அலுவல்கள் பட்டியல் பகிரப்படும். இருப்பினும், பட்டியலைப் பகிர்ந்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன்; அதைச் செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ’ என்றார். கூட்டத்தில் பங்கேற்ற திமுக தரப்பில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், \” தமிழக நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை குறித்த விவாதிக்க கோரினோம். சட்டமன்ற கூட்டத்துடன் தொடங்குவதற்கு முன்பாக ஆளுநர் உரை அவசியம் இல்லை என திருத்தத்தை அரசியல் சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் முன்மொழிய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

* எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
ஒன்றிய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் ரத்து, எஸ்ஐஆர் பிரச்னையை எழுப்ப அனுமதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கேவின் அறையில் கூடி, அமர்வின் போது தங்கள் கூட்டு உத்தியை வகுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories: