புதுடெல்லி: ‘‘500 பில்லியன் டாலர் வாய்ப்புகள் நிறைந்துள்ள இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்ய வாருங்கள்’ என உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய எரிசக்தி வார விழா கோவாவில் நேற்று தொடங்கியது. 125 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றும் இவ்விழாவை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது: எரிசக்தித் துறையில் முதல் 5 ஏற்றுமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று என்பதை குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் லட்சத்தியத்தின் மையமாக எரிசக்தி துறை இருக்கிறது. இதில், 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டு வாய்ப்புகளை கொட்டிக் கிடக்கின்றன. சுத்திகரிப்பு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மதிப்புச் சங்கிலி உள்கட்டமைப்பு, எரிவாயு விநியோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு போன்ற துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நிறைய நன்மைகளை நீங்கள் பெற முடியும்.
2030-ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை இலக்காகக் கொண்டுள்ளோம். ஆய்வுத் துறையில் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி உள்ளோம். தடை செய்யப்பட்ட பகுதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஆய்வுத் துறையில் முதலீடு செய்தால், உங்கள் நிறுவனத்தின் லாபம் நிச்சயம் அதிகரிக்கும். சுத்திகரிப்புத் திறனின் அடிப்படையில் இந்தியா உலகில் 2வது பெரிய நாடாக உள்ளது. விரைவில் நாம் முதலிடத்தைப் பிடிப்போம். இன்று, இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு தோராயமாக 260 மில்லியன் டன்களாகும். இதை ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கும் மேலாக அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கும். எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், இந்தியாவில் புதுமைகளைப் புகுத்துங்கள், இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சியடையுங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்பதே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.
