பெங்களூரு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை விபி ராம் ஜி என்று ஒன்றிய அரசு மாற்றியதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது: ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாய கூலி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 20 ஆண்டுகள் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை தற்போது ஒன்றியத்தில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ‘விபி ஜி ராம்ஜி’’ என்று மாற்றியுள்ளது. அத்துடன் திட்டத்திற்கான மொத்த செலவில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதமாகவும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை புதிய திட்டத்தில் சேர்த்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு கர்நாடகம் மட்டுமில்லாமல், தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாத்மாகாந்தி மீது உள்ள வெறுப்பில் திட்டத்தின் பெயரை பிரதமர் மாற்றினாரா? அல்லது ஆர்எஸ்ஸ் அமைப்பு கொடுத்த ஆலோசனை பேரில் மாற்றினாரா?. தேசபிதாவுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளின் பெயரை இனி மகாத்மாகாந்தி கிராம பஞ்சாயத்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மாநில அரசின் சார்பில் அடுத்தமாதம் தாக்கல் செய்யும் 2026-27ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் இவ்வாறு சித்தராமையா பேசினார்.
