குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல் அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில்

வேலூர், ஏப்.27: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா விற்றதாக 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறையினர், மாவட்ட காவல்துறை இணைந்து பல இடங்களில் திடீரென மேற்கொண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அருகே உள்ள பெட்டிக் கடைகளில் போதைப் பொருட்கள் விற்பதை தடுக்கவும் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், நந்தினி, காயத்ரி மற்றும் குழுவினர் அப்துல்லாபுரம் அருகே பொய்கை பகுதியில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அங்கிருந்த பல கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு பெட்டிக்கிடையில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்து 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குட்கா விற்பனை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். விற்பனை செய்யும் கடையில் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் மட்டும் 5 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். இதுபோன்று அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல் அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் appeared first on Dinakaran.

Related Stories: