“இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு”: தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.74 ஆயிரத்தை தாண்டியது- அதிர்ச்சியில் மக்கள்!!..

சென்னை: வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.74,320 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் மீதான விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரி 1ம் தேதி ஒரு பவுன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர், பிப்ரவரி தொடக்கத்தில் பவுன் விலை ரூ.61,960-க்கு உயர்ந்தது. தொடர்ந்து கடந்த மார்ச் 1ம் தேதி ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இம்மாதம் தொடக்கத்தில் ரூ.68,080-க்கு விற்பனையாகி வந்தது. இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களாக ரூ.71,560-க்கு தங்கம் விலையில் மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்றைய தினம் ரூ.72 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையானது கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அதாவது, 4 மாதங்களில் ரூ.17,000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று(ஏப்.22) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9,290-க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது. இதனால், தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இல்லை. விரைவில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா- சீனா இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைக்கப்படாத பட்சத்தில் தங்கம் விலை இன்னும் கடுமையாக உயரக்கூடும். ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுதற்கு இல்லை. இந்த கிடு, கிடு விலை உயர்வால் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post “இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு”: தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.74 ஆயிரத்தை தாண்டியது- அதிர்ச்சியில் மக்கள்!!.. appeared first on Dinakaran.

Related Stories: