சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை : சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், இதுசம்பந்தமாக புகார் அளித்தவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.

சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். மேலும் துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்க மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, மாறாக செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் துணைவேந்தர் ஜெகநாதன், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சிகளை கலைத்தால் அவரை கைது செய்து விசாரணை நடத்தலாம் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: