பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைஉத்தரவு

சென்னை: பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுப்பதற்கும், மாணவர்களை பாதுகாப்பதற்கும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
*மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில், பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.

*விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள். கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணிய இயக்க முகாம்களில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

*விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய விடுதிக்குள் வெளி நபர்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மேலும், விடுதி பராமரிப்புப் பணிகளுக்காக அனுமதிக்கப்படும் பணியாளர்கள் பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.

*பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி எண் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

*அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் பள்ளியில் நடக்கும் அனைத்து காலைவணக்கக் கூட்டங்களில் தலைமை ஆசிரியரும், ஏனைய ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். அதில் சில நிமிடங்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குழந்தைகள் நன்கு அறியும் வண்ணம் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

*சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கழிப்பறைகள் அமைக்க மறைவான இடங்கள் மற்றும் பாதுகாப்புள்ள இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பெண் கழிப்பறைகள் மகளிர் பணியாளர்கள் மட்டுமே தூய்மைப் பணிகளை செய்ய பணிக்கப்பட வேண்டும்.

*அனைத்து வகையான ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் எப்பொழுதும் ஓர் பெண் ஆசிரியர், பணியாளர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

*ஆண் ஆசிரியர்களின் அறையில் ஆண் பணியாளர் அறையில் குறிப்பாக பெண் குழந்தைகள் செல்வதை அனுமதித்தல் கூடாது. இதனை கட்டாயம் நடைமுறை படுத்த வேண்டும்.

*பெண்கள் பயிலும் பள்ளியில் பெண்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் குறைந்தது 50 சதவிதம் பணியாளர்கள் பெண்களாக இருத்தல் வேண்டும்.

*பள்ளிக்கு வெளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளுக்கு பங்கேற்கும் போது கட்டாயம் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள், பங்கேற்கும் குழந்தைகளின் தாயார் பெண்குழந்தைகளை அழைத்துவர அனுமதித்தல் வேண்டும். அவ்வாறு பொறுப்பு வழங்கப்படும் பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பு விவரம் அறிந்தவராகவும், பொறுப்பாக செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.

*பாலியல் குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருப்பதால், மேற்கூறியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைஉத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: