தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே1 முதல் 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 3ம் தேதி அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று முதல் 1ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: