கள்ளக்குறிச்சி, ஏப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை பெற 100 சதவீத கட்டண சலுகை, ஸ்காலர்ஷிப் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 2025-26ம் கல்வி ஆண்டிற்கான கட்டண சலுகை பெற தகுதித்தேர்வுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என ஏற்கனவே பள்ளி தாளாளர் மணிமாறன் அறிவித்து இருந்தார். அதன்படி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி வளாகத்தில் ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் 1050 மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெற்றது.
அதில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதினர். இதில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தகுத்தித்தேர்வு மையத்தை பள்ளி தாளாளர் மணிமாறன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கட்டண சலுகை பெற தகுதித்தேர்வு எழுதுவதற்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மவுண்ட்பார்க் பள்ளி பேருந்துகள் கட்டணமின்றி இயக்கப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அந்தந்த பகுதிக்கு அதே பள்ளி பேருந்துகள் மூலம் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து பள்ளி தாளாளர் மணிமாறன் கூறியதாவது: ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விடுதி கட்டணம், நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கட்டணம் ஆகியவை சேர்த்து 100 சதவீத சலுகை 25 பேருக்கும், கல்விக்கட்டணம் மட்டும் 100 சதவீத சலுகை 50 பேருக்கும், கல்விக்கட்டணம் மட்டும் 50 சதவீத சலுகை 50 பேருக்கும், கல்விக்கட்டணம் மட்டும் 25 சதவீத சலுகை 50 பேருக்கு என மொத்தம் 175 பேருக்கு கட்டண சலுகை ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பிளஸ் 1 சேர்க்கையில் ரூ.5000 வரை கட்டணச்சலுகைகள் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் வருகின்ற 20 ம்தேதி அந்தந்த மாணவர்களின் பெற்றோர்களின் வாட்ஸ்ஆப் மொபைல் எண்ணிற்கு தெரிவிக்கப்படும். மேலும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று கட்டணச்சலுகைகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பிளஸ் 1 சேர்க்கை 100 சதவீத கட்டண சலுகை பெற தகுதித்தேர்வு 1,050 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.