கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி பயிர்களை தாக்கும் செம்பேன் நோய் கட்டுப்படுத்த நடவடிக்கை

கல்வராயன்மலை, ஏப். 24: கல்வராயன் மலை பகுதியில் மரவள்ளி பயிர்களில் செம்பேன் நோய் தாக்கி வருவதால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை, சின்ன திருப்பதி, மணியார்பாளையம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பெரும்பாலும் மரவள்ளியை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சின்ன திருப்பதி, தாழ்பாச்சேரி, கெடார், வாரம், சேராப்பட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது மரவள்ளி பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் வளர்ந்து 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது செம்பேன் நோய் தாக்கப்படுவதால் மரவள்ளி பயிரின் மேல்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது. மரவள்ளி செடியின் வளர்ச்சியும் குறைந்து காணப்படுகிறது. இதனால் மரவள்ளிக்கிழங்கு மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் நிலை உள்ளதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பருவ காலத்திற்கு ஏற்றவாறு இப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மரவள்ளி பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். பயிர் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் செம்பேன் நோய் தாக்குதலால் செடிகள் மேல் பகுதியில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்து செடியின் தண்டு பகுதியில் வெள்ளை பூச்சிகள் உள்ளதால் இலைகள் உதிர்ந்து வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவில் மகசூல் கிடைக்குமா? என சந்தேகம் உள்ளது. மேலும் இந்த நோய் அருகிலுள்ள நிலங்களுக்கும் பரவி வருகிறது. பல்வேறு வகையான மருந்துகள் தெளித்தும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் நோய் தாக்கிய மரவள்ளி வயலை நேரடியாக ஆய்வு செய்து நோயினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

The post கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி பயிர்களை தாக்கும் செம்பேன் நோய் கட்டுப்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: