கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை மாணவி சரண்யா யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 125 வது இடத்தில் தேர்ச்சி

நெல்லிக்குப்பம் ஏப். 24: பத்திரக்கோட்டை மாணவி சரண்யா யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 125வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதே ஊரில் மற்றொரு மாணவன் 740 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிலம்பினாதன் பேட்டை ஊராட்சி பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராஜ் மகன் சரவணன், மனைவி ஜெயா. இவர்களுக்கு சரண்யா என்ற மகளும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். சரவணன் தனது வீட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். மற்ற நேரங்களில் இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்குச் சென்று முந்திரிக்கொட்டை உடைக்கும் வேலையும் செய்து வருவார். மகள் சரண்யா பிளஸ்2 முடித்த பின்னர் பவானி மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் அக்ரி படித்து தேர்ச்சி பெற்றார்.

சரண்யாவுக்கு சிறுவயதில் இருந்தே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என ஆர்வம் இருந்துள்ளது. ஆகையால் சென்னை கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் தங்கி கடந்த ஓராண்டு காலம் தேர்விக்கான பாடங்களை படித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதினார். இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாணவி சரண்யா இந்திய அளவில் 125 வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சரண்யாவை பத்திரக்கோட்டை பகுதி மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினார்கள். இதேபோல் சிலம்பினாதன் பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ராஜ பிரபு கடந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தற்போது இந்திய அளவில் 740 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். சிலம்பினாதன் பேட்டை ஊராட்சியில் 2 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு வரும் சரண்யா மற்றும் ராஜபிரபுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

The post கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை மாணவி சரண்யா யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 125 வது இடத்தில் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: