விழுப்புரம், ஏப். 24: திண்டிவனம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை கொலை செய்த கல்குவாரி உரிமையாளர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்சி- எஸ்டி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பன் மகன் மணிகண்டன்(31). கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அதே பகுதியில் உள்ள கிராம சேவை மைய கட்டிட வாசலில் உட்கார்ந்து இருந்தபோது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதே கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலு(45), பழனிச்சாமி மகன் பாலா(26), எமகுண்டு மகன் வாசு(26), முருகேசன் மகன் மோகன்(32), மேகநாதன் மகன் தேவநாதன்(30), சின்னசாமி மகன் பாலமுருகன்(30), மண்ணாங்கட்டி மகன் பாலகிருஷ்ணன்(42), நாராயணசாமி மகன் ஆனந்தன்(30), கூடத்தான் மகன் மணிகண்டன்(30) ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சி- எஸ்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பாலு(45), பாலா(26), பாலமுருகன்(30), பாலகிருஷ்ணன்(42) ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மோகன், தேவநாதன், ஆனந்தன், மணிகண்டன் ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதில் 3வது குற்றவாளி வாசு வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டார். இதில் முதல் குற்றவாளி பாலு கல்குவாரி உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post திண்டிவனம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு வாலிபரை கொன்ற வழக்கில் கல்குவாரி உரிமையாளர் உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.