மகள், மருமகன் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியில் தாய் சாவு

புதுச்சேரி, ஏப். 22: புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் மகள், மருமகன் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியில் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (45), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் வசந்தா (71). இவர் சில நாட்கள் மகன் வீட்டிலும், சில நாட்கள் பூமியான்பேட்டையில் உள்ள மகள் வீட்டிலும் வசிப்பது வழக்கம். வசந்தாவின் மருமகன் கோயிலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பூமியான்பேட்டையில் உள்ள வீட்டில் வசந்தா மற்றும் அவரது மகள் ஆகியோர் இருந்தபோது மருமகன் ரவிச்சந்திரன் கோயிலில் வேலை முடிந்து வீடு திரும்பி உள்ளார். சிறிதுநேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்த அவரது மனைவியும் மயங்கினார். மகளும், மருமகனும் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் வசந்தா அதிர்ச்சியடைந்து, இந்த தகவலை தனது பேரன் பிரசன்னகுமாருக்கு செல்போனில் தெரிவித்தார். சிறிதுநேரத்தில் வசந்தாவுக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நிமிடங்களில் பிரசன்னகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 3 பேரும் மயங்கி கிடந்துள்ளனர். உடனே அவர் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வசந்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.தொடர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளும், மருமகனும் அடுத்தடுத்து மயங்கி விழுந்த அதிர்ச்சியில் தாயார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரெட்டியார்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை உணவு சாப்பிடாததால் கணவனும், மனைவியும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மகள், மருமகன் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியில் தாய் சாவு appeared first on Dinakaran.

Related Stories: