சின்னசேலம், ஏப். 17: சின்னசேலம்- பொற்படாகுறிச்சி இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதையில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில் வசதி வேண்டும் என்ற கள்ளக்குறிச்சி நகர பகுதி மக்களின் வேண்டுகோளின்படி கடந்த 2016ல் ரூ.128 கோடி மதிப்பில் ரயில்வே பாலம், தண்டவாளம், தரைகீழ் ரயில்வே பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் மந்தமாக நடப்பதாகவும், விரைவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து சோதனை ஓட்டம் நடத்தி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் ரயில்வே மண்டல அதிகாரிகள் வந்து ரயில் தண்டவாள பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சின்னசேலம்- பொற்படாகுறிச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால், அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு நபரும் புதிய ரயில் பாதையை கடக்கவோ, அதனருகே பணிபுரியவோ கூடாது என்று சென்னை எழும்பூர் ரயில்வே கட்டுமான முதன்மை பொறியாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து நேற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, தலைமை நிர்வாகக்குழு அதிகாரி (தெற்கு கட்டுமானம். சென்னை) மவுரியா, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சிந்தா, துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம், சேலம் கோட்டம்) திருமால் உள்ளிட்ட குழுவினர் சின்னசேலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, தலைமை நிர்வாகக்குழு அதிகாரி மௌரியா உள்ளிட்ட குழுவினர் சின்னசேலம்- பொற்படாகுறிச்சி இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையை டிராலி வண்டியில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிவேக ரயில் சோதனை ஓட்டத்திற்கு சின்னசேலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பெட்டிகள் கொண்ட தனி ரயிலை எடுத்து சென்று பொற்படாகுறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்திற்கு இயக்கினார்கள்.
முதலில் மணிக்கு 10கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி பின் படிப்படியாக 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கினார்கள். அப்போது ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் கிராம மக்கள் நின்று ஆரவாரம் செய்து வரவேற்றனர். மேலும் ரயில் சென்றபோது இருபுறமும் புழுதி பறந்து ரயில் செல்வது தெரியாத அளவில் இருந்தது. பிறகு சின்னசேலம் ரயில் நிலையத்தை நெருங்கிய உடன் படிப்படியாக வேகத்தை குறைத்து நிறுத்தினார்கள். பொற்படாகுறிச்சி- சின்னசேலம் இடையே உள்ள 12 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 12 நிமிடத்தில் கடந்து சின்னசேலம் ரயில் நிலையத்தை அடைந்தது. மேலும் சோதனை ஓட்டத்திற்கான ரயில் பொற்படாகுறிச்சி ரயில் நிலையம் சென்றபோதும், சின்னசேலம் ரயில் நிலையம் வந்தபோதும் ஏராளமான பயணிகள், பொதுமக்கள், அலுவலர்கள் வரவேற்று செல்பி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சின்னசேலம்- பொற்படாகுறிச்சி ரயில் பாதையில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.