பெரம்பலூர், ஏப்.12: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று “சமத்துவ நாள்” உறுதி மொழி ஏற்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று (11ம் தேதி) மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பாக, அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல்14-ம் தேதி ஆண்டு தோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாளாகக் கடை பிடித்து, சமத்துவ உறுதி மொழி ஏற்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வருகிற 14ம்தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் என்பதால், அரசு வேலை நாளான நேற்று (11ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ‘சாதி வேறு பாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிவிழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதிவேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடு படுவோம் என்றும்,
சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்” என்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்டக் கலெக்டர் அலுவலக மேலாளர்கள் சரவணன் (பொது), அருளானந்தம் (குற்றவியல்), சப்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாரதி வளவன் மற்றும்பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.