பெரம்பலூர், ஏப்.23: தொழிற் சங்கக் கொடிமரம், தகவல் பலகையை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி, அரசியல் சாசன சட்ட உரிமை, தொழிற்சங்க கூட்டு பேர உரிமைகளை பறிக்கும் செயலைக் கண்டிப்பது.
தொழிற்சங்க கொடிமரம், தகவல் பலகையை அகற்றி உரிமையை பறிக்கும் செயலைக் கண்டிப்பது. தொழிற்சங்கத்தின் மீது வன்மத்துடன் கொடி மரங்களை அகற்றி, மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடுத்து கைது செய்த திருச்சி கண்டோன் மென்ட் காவல்துறையை வன்மையாக கண்டிப்பது என வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
சங்க நிர்வாகிகள் பழனிச் சாமி, சுப்பிரமணி, மணிவேல், பொண்ணு வேலு, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் அகஸ்டின், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் கருணாகரன், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட செயலாளர் சகுந்தலா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
The post பெரம்பலூரில் தொழிற்சங்க கொடி கம்பம் அகற்றத்தைக் கண்டித்து சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.