பெரம்பலூர்,ஏப்.24: விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இது குறித்து அவரது செய்திக்குறிப்பு விவரம்: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் கடந்த 18ஆம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
7 முதல் 11ம் வகுப்பு வரை: விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7-ஆம், 8-ஆம், 9-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன் லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள் மே 5ஆம் தேதி, மாலை 5மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலை பேசியினை 95140 00777 எண்ணிலும், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தகுதி:விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற மே மாதம் 7ஆம் தேதி காலை 7 மணி அளவில் மாணவர்களுக்கும், மே 8ஆம் தேதி காலை 7 மணி அளவில் மாணவிகளுக்கும் நடைபெற உள்ளது.
இந்த மாவட்ட அளவிலான விளையாட்டு தேர்வுப் போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப் பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபாடி, கையுந்துபந்து, ஆகிய விளையாட்டுகளும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேர்வுகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது. இப்ப போட்டியில் பங்கேற்க ஆன் லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப் தகவல்: இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான தேர்வின் போது மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளியில் பயிலுவதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் (ID card, Bonifide) சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதிபெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும். மேலும், மாநில அளவிலான தேர்வுப்போட்டிகள் மேமாதம் 12ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாள் விளையாட்டு, ஜுடோவும், பள்ளி மாணவர்களுக்கு குத்துச் சண்டை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பளு தூக்குதல் மற்றும் மாணவர்களுக்கு அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரிலும், நீச்சல் மாணவ, மாணவியர்களுக்கு AGB Complex, வேளச்சேரி, சென்னையிலும், குத்துச் சண்டை மாணவியர்கள், ஸ்குவாஷ் மாணவர்களுக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் சென்னையிலும்,
மல்யுத்தம் மாணவர்கள் டேக்வாண்டோ மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், கடலூரிலும், மல்லர்கம்பம் மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் விழுப்புரத்திலும், தேர்வுகள் மே 12 அன்று காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது. கைப்பந்து பள்ளி மாணவருக்கு 12ஆம் தேதி மற்றும் மாணவிகளுக்கு 13ஆம் தேதி அண்ணா விளையாட்டரங்கம், திருச்சியிலும் காலை 7 மணி முதல் நடைபெறவுள்ளது. மேலும், தனி நபர்கள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப் பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதங்கங்கள் பெற்றவர்களும் மற்றும் கலந்து கொண்டவர்களும் மாவட்ட, மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் தேர்வுக்கு முன்னுரிமை தகுதியானவர்கள். எனவே 2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெற மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் 7 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: மே 5ம் தேதி கடைசி நாளாகும் appeared first on Dinakaran.