பெரம்பலூர்,ஏப்.24: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் துவங்குகிறது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆண்டிற்கு 1,299 சார்பு ஆய்வாளர் பணிக்கான காலியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ஆகும்.
மேலும், விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு, இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. மேலும், சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டல் மையத்தில் வருகிற 30 ஆம்தேதி முதல் திறனறி பலகை மற்றும் காற்றோட்டமான வசதியுடன் கூடிய வகுப்பறைகளுடன், வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப் புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்புகளில், கலந்து கொள்ள விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி சான்று மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன் வருகிற 30ஆம் தேதி அன்று நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55913 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.