சோழிங்கநல்லூர், ஏப். 12: 22 ஆண்டாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள ஆறரை கிரவுண்ட் நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 34வது வார்டு கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 ஆயிரத்து 760 சதுர அடி கொண்ட ஆறரை கிரவுண்ட் நிலத்தை கடந்த 22 வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த ராமர், ஜெயலட்சுமி, பாலமுருகன், ஹேமலதா, சாம்பசிவம் உள்ளிட்டோர் ஆக்கிரமித்து கடைகளை கட்டி இருந்தனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தென்றல் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வழக்கை நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அரிநாத், உதவி பொறியாளர் சிவசக்தி, பாலச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதிக்கு பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று ஆறரை கிரவுண்ட் இடத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு கட்டி இருந்த கடைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர்.
போலீசாரின் உதவியோடு குறிப்பிட்ட நிலம் மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டது. 75 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைவில் முடிக்கப்படும் எனவும் அதன் பிறகு இடத்தை சுற்றி காம்பவுண்ட் போடப்பட்டு மாநகராட்சி வசம் குறிப்பிட்ட இடம் கொண்டு வரப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 22 ஆண்டாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.8 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.