செங்கல்பட்டு, ஏப்.9: செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டு உடைத்து ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போன்கள், ஆடைகள் ஆகியவற்றை கொள்ளையடுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு பெரிய செட்டி தெருவில் தினேஷ் என்பவர் செல்போன் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் செல்போன் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் ஷெட்டரில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.50ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே அருகே உள்ள இரண்டு துணிக்கடைகளிலும் பூட்டு உடைத்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் துணிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருட்டு நடந்த கடைகளின் உரிமையாளர்கள் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் கடப்பாரையால் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேறியது. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே 3 கடைகளில் பூட்டு உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை: ஹெல்மெட் அணிந்த 3 நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.