கிளாம்பாக்கம், ஏப்.22: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் எளிதில் கிளாம்பாக்கம் சென்று வருவதற்கு வசதியாக, ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 நடைமேடைகளுடன் 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிறுத்தும் வசதியுடன் இது அமைகிறது. ரயில் நிலையப்பணி சுமார் 60 சதவீதம் முடிந்துள்ளது.
இதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புதிதாக அமையும் ரயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் வந்து செல்வதற்கு 450 மீட்டர் உயர்மட்ட நடைமேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாக ஊரப்பாக்கம்-வண்டலூர் இடையே ரயில்கள் வந்து செல்ல வசதியாக பழைய தண்டவாளத்தை 2 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே தண்டவாளத்தை நகர்த்துவதில் சிரமம் உள்ளதால் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஊரப்பாக்கம் மேம்பாலத்தின் அடியில் இருந்து வண்டலூர் சிவன் கோயில் வரை தண்ட வாளம் புதிதாக அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததும் அப்பகுதியில் உள்ள பழைய தண்டவாளம் துண்டித்து எடுக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படும் தண்ட வாளத்துடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு ஊரப்பாக்கம் – வண்டலூர் இடையே 400 மீ ரயில் பாதை பணி தொடக்கம் appeared first on Dinakaran.