4வழி – புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி நிதி ஒதுக்கீடு

வேலூர், ஏப்.10: வேலூரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் 4 வழி- புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் எடுப்பு பணிகள் முடிவடைந்தது. விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருந்தால் கடந்த 2019ம் ஆண்டு தமிழக அரசு நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் உருவாகி உள்ளது. அதேபோல் வளர்ச்சி பெறாத மாநகராட்சியாகவும் இருந்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும் சாலை விரிவாக்கம் இல்லாததால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது.

இதேபோல் வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாநகர சுற்றுச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலகுப்பம்- மூஞ்சூர்பட்டு சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சாலை திட்டமான வட்டச்சாலை திட்டம் கேள்விக்குறியானது. இதனால் வேலூர், குடியாத்தம் புறவழிச்சாலைகள் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17 திட்டப்பணிகளில் மங்களூர்- விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர், குடியாத்தம் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரூ.104 கோடியில் குடியாத்தம் புறவழிச்சாலைகள் அமைக்க நில எடுப்புக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

தொடர்ந்து ரூ.221 கோடியில் குடியாத்தம் புறவழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற உள்ளது. இதற்கிடையில் முக்கிய திட்டமான வேலூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு ஒப்பதல் வழங்கியது. இதனால் நில எடுப்புக்கான பணிகள் தொடங்கியது. இழப்பீடு வழங்க ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், லத்தேரி அருகிலும், சாத்துமதுரை அருகிலும் ரயில்வே மேம்பாலங்கள், ராணிப்பேட்டை – கிருஷ்ணகிரி 6 வழிச்சாலையில் பொய்கை அருகில் ஒரு மேம்பாலம் மற்றும் சிறிய வாகன மேம்பாலம் 4ம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் மொத்தம் 13 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 10 கிராமங்களில் அளவீடு செய்யப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 3 கிராமங்களில் சிறிய, சிறிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலை மூலம் வேலூர், காட்பாடி ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நேரம், எரிபொருள் விரயமும், சாலை விபத்துகளும் குறைய வாய்ப்புள்ளது. வேலூர் நகரத்திற்கு 20.4 கி.மீ தூரத்திற்கு 4 வழி- புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு ரூ.753 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வேலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது. ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சமீபத்தில் வேலூர் நகரத்திற்கு 20.4 கி.மீ புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு ரூ.753 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 20.7 கி.மீ நீளம் கொண்ட வேலூர் புறவழிச்சாலை காட்பாடி சாலையில் லத்தேரி நகருக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை, புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக விழுப்புரம்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை 234ல் இணைகிறது. இச்சாலையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், லத்தேரி அருகில் ரயில்வே மேம்பாலமும், சாத்துமதுரை அருகில் ரயில்வே மேம்பாலமும், சென்னை-பெங்களூரு ஆறுவழிச்சாலையில் பொய்கை அருகில் மேம்பாலம் மற்றும் சிறிய வாகன மேம்பாலம் நான்கும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புறவழிச்சாலைகளுக்கான நில எடுப்புப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நில உடமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. தொடர்ந்து சாலை விரிவாக்கத்துக்காக அடையாளம் காணப்பட்ட மரங்கள் அகற்றும் பணிகளும், கட்டிடங்கள் அகற்றும் பணியும் தொடங்குகிறது. தற்போது இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த புறவழிச்சாலையால் சித்தூர், காட்பாடி, வி- கோட்டா, லத்தேரி மற்றும் வாணியம்பாடி ஆகிய இடங்களிலிருந்து பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேலூர் நகரம் வழியாக செல்லாமல், அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஆரணி மற்றும் திருவண்ணாமலைக்கும் செல்ல உதவும். புதிய புறவழிச்சாலை வேலூர் நகரத்தை முழுவதுமாக தவிர்த்து, விழுப்புரம், கலசபாக்கம் மற்றும் ஆரணியிலிருந்து பெங்களூரு, சித்தூர் மற்றும் குடியாத்தம் செல்லும் வாகனங்களுக்கான இணைப்பையும் மேம்படுத்தும்.

The post 4வழி – புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: