வேலூர், ஏப்.24: தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 13 பேர் குடும்பங்களுக்கு ரூ.6.20 லட்சத்துக்கான காசோலைகளை சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் வழங்கினார். மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி சிறைவாசிகள் சிறையில் செய்யும் வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அந்த நிதியில் இருந்து அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் வேலூர் மத்திய சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சிறைத்துறை அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நன்னடத்தை அலுவலர்கள் திருவண்ணாமலை ஹேமலதா, செய்யாறு பிரபாவதி, குடியாத்தம் மூவேந்தன், திருப்பத்தூர் பாரதிராஜா வேலூர் சரவணன், சிறை நல அலுவலர் மோகன், மனநல அலுவலர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறைத்துறை மருத்துவர் பிரகாஷ் ஐயப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மத்திய சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வேலூர் பேர், திருவண்ணாமலை 2 பேர், செய்யாறு 5 பேர், திருப்பத்தூர் 2 பேர், ராணிப்பேட்டை 2 பேர் என்று மொத்தம் 16 பேருக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டது. இந்த நிதி ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை என வங்கி வரைவோலையாக வழங்கப்பட்டது.
The post சிறைவாசிகளால் பாதித்த 13 பேர் குடும்பங்களுக்கு ரூ.6.20 லட்சம் நிதியுதவி தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் appeared first on Dinakaran.