சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலூர், ஏப்.26: காட்பாடியை சேர்ந்த முதியவரிடம் சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறி ரூ.31 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு பிரபல கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக செல்போன் அழைப்பு வந்ததுள்ளது. அதில் பேசிய மர்ம நபர், `உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், துணி வகைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் நகைகள் உள்ளது. மேலும், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் உள்ளது. உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு விசாரணை செய்வார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

பின்னர், சிறிது நேரம் கழித்து வாட்ஸ்அப் வீடியோ காலில் அவரை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அப்போது, போலீஸ் உடையில் இருந்த அந்த நபர், போதைப்பொருள் பார்சல் அனுப்பியதற்காக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. அதை தவிர்க்க வேண்டும் என்றால், உங்களது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக்கணக்குக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அதை சரிபார்த்து திருப்பி அனுப்பி விடுவோம் என கூறியுள்ளார். அதை நம்பிய முதியவர், 2 தவணைகளில் ரூ.31 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து முதியவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.31 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: