ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி தாசில்தாரின் டிரைவர் மீது புகார் வேலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர், ஏப்.22: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ மாலதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.கூட்டத்தில், வேலூர் நஞ்சுகொண்டாபுரத்தை சேர்ந்த கோதண்டன், தனது மனைவி மற்றும் கர்ப்பிணி மகளுடன் அளித்த மனுவில், எங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். அதற்கு 3 ஆண்டுகளாக ஊராட்சி சார்பில் வீட்டு வரி வசூலித்தனர். மேலும் அதற்கான ரசீது கொடுத்தனர். ஆனால் தற்போது ரசீது தரவில்லை. இதை கேட்டால் வீட்டின் மீது வழக்கு இருப்பதால் ரசீது தர முடியாது எனக்கூறுகின்றனர்.

வீட்டிற்கு மின்வசதியும் இல்லை. எனது மகள் கர்ப்பிணியாக இருப்பதால் மின்சாரம் இன்றி சிரமத்திற்குள்ளாகி வருகிறார். எனவே வீட்டு வரி ரசீது வழங்குவதுடன் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். வேலூர் கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்(39), அளித்த மனுவில், ‘நான் வேலூர் கூட்டுறவு பெட்ரோல் பங்கில் தற்காலிக ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறேன். இந்த பங்கில் ரெகுலராக டீசல் போட தாசில்தாரின் டிரைவர் ஒருவர் வருவார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் ரூ.3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.

மேலும் எனது நண்பர்கள் 4 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்தை கடந்த 2022ம் ஆண்டு கொடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலையும் கிடைக்கவில்லை, பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ல்காவனூரில் கோயிலை இடித்து, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். வேலூர் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். கூட்டத்தில் முதியோர் உதவிதொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 620 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

The post ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி தாசில்தாரின் டிரைவர் மீது புகார் வேலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: