வேலூர், ஏப்.23: வேலூர் சைதாப்பேட்டையில் நேற்று அதிகாலை காலணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வேலூர் சைதாப்பேட்டை ராமர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன்(42). இவருக்கு சொந்தமான 2 மாடி கொண்ட வீட்டை செருப்பு தைக்கவும், அதனை குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் வேலையில் இருந்தவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். அப்போது ரேடியோவை ஆப் செய்யாமல் சென்றுள்ளனர். இரவு மின்சாரம் வந்த பிறகு, ரேடியோ ஆன் ஆகி தொடர்ந்து, இயங்கியுள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் குடோன் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள், குடோன் முழுவதும் தீ மளமளவென பரவியது. 2 மாடி முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அருகே உள்ள வீட்டு மாடி வழியாக சென்று சுவற்றில் துளையிட்டு அதன் வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக மாறியது. மேலும் தீ விபத்தின் போது, வீட்டில் யாரும் இல்லாததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தீ விபத்தால் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post காலணி குடோனில் தீ விபத்து சுவரில் துளையிட்டு தீயணைப்பு வேலூர் சைதாப்பேட்டையில் appeared first on Dinakaran.