ஸ்ரீமுஷ்ணம், மார்ச் 23: குழந்தை தொழிலாளராக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை தொழிலாளர் நலத்துறையினர் மீட்டு குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே அம்பேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் சோழத்தரம் அருகே அகரபுத்தூரை சேர்ந்த சர்க்கரை மகன் இருதயராஜ்(44), சோபியா(36) ஆகியோரிடம் 2 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, தனது 14 வயது சிறுவனை அவர்களிடம் ஆடு மேய்க்க வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானபிரகாசம் தலைமையிலான குழுவினர் மற்றும் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டு, குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அகரபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், இருதயராஜ், சோபியா ஆகிய 2 பேர் மீதும் சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குழந்தை தொழிலாளராக ஆடு மேய்த்த 14 வயது சிறுவன் மீட்பு: 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.