வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் கைது

 

உளுந்தூர்பேட்டை, மார்ச் 18: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி மகன் வினோத் (29). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை போரூர் பகுதியில் உள்ள சாம்சங் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சென்னைக்கு திரும்ப சென்று கொண்டிருந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலை வந்தபோது சேலம் தேசிய நெடுஞ்சாலை ஒலையனூர் என்ற இடத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் வினோத்தை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 2 பவுன் செயின், ஒரு செல்போன், லேப்டாப், ரூ.20 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வினோத் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில், சப்-இன்ஸ்டர்கள் ராஜேஷ், கார்த்திக், தலைமை காவலர்கள் அசோக்குமார், விக்ரம்வாசு, ரமேஷ், சுபாஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசார், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை சேலம் ரோடு ரவுண்டானா அருகில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் காரல் மார்க்ஸ் (34), சோழபுரம் பகுதியை சேர்ந்த குத்புதீன் மகன் முகமது அன்சாரி (30) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களின் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு லேப்டாப், ஒரு செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழிப்பறி வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட காரல் மார்க்ஸ் மற்றும் முகமது அன்சாரி ஆகிய இருவரையும் போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: