சின்னசேலம், மார்ச் 23: சின்னசேலம் அருகே மான் வேட்டையை தடுக்க சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த வனக் காப்பாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தொழிலாளியை கைது செய்த போலீசார், தப்பிஓடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி, குரால், தோட்டப்பாடி, கிருஷ்ணாபுரம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. இந்த மான்களை சமூக விரோதிகள் இரவில் துப்பாக்கியை எடுத்துச் சென்று அவ்வப்போது வேட்டையாடுவது வழக்கம். அதைப்போல அரசு ஆட்டுப்பண்ணையை ஒட்டிய பாக்கம்பாடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் 2 பேர் துப்பாக்கியுடன் சென்று மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை வனச்சரகத்தை சேர்ந்த வீ.கிருஷ்ணாபுரம் பீட் வனக்காப்பாளர் வேல்முருகன் (28) அப்பகுதிக்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் ஒற்றை குழல் துப்பாக்கியை கொண்டு 2 பேர் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வேல்முருகன் பிடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது வேட்டையில் ஈடுபட்டவர்கள் சின்னசேலம் பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலு என்ற பாலகிருஷ்ணன் (45), குரால் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி செல்லக்கண்ணு (43) என்பதும், பைக்கில் மான்களை வேட்டையாட வந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வனக்காப்பாளர் வேல்முருகன், செல்லக்கண்ணுவை பிடிக்க முயன்றபோது பாலகிருஷ்ணன் தான் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வேல்முருகனின் வலது குதிக்காலில் சுட்டதோடு, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். மற்ெறாருவரான செல்லக்கண்ணு என்னை பிடித்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போது வேல்முருகன் உள்ளிட்ட ஊழியர்கள் செல்லக்கண்ணுவை சுற்றிவளைத்து பிடித்து 2 பேரும் வைத்திருந்த பைக், துப்பாக்கி மற்றும் ஹெட்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் சின்னசேலம் காவல் சரகத்திற்குட்பட்ட கீழ்குப்பம் காவல் நிலையத்தில் செல்லக்கண்ணு ஒப்படைக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் ரவி, அளித்த புகாரின்பேரில் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது, துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து செல்லக்கண்ணுவை கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய பாலகிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே காயமடைந்த வேல்முருகன் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்தியாயினி சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு, சிகிச்சை பெறும் வேல்முருகனிடம் உடல்நலம் விசாரித்து நடந்த விபரத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
The post சின்னசேலம் அருகே பரபரப்பு: மான் வேட்டையை தடுத்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.