கடலூர், மார்ச் 23: பள்ளி மாணவனை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். கடலூர் மாவட்ட பாமக செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில், நடுவீரப்பட்டு அடுத்த குழந்தைகுப்பம் பகுதி பொதுமக்கள் நேற்று கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் கடந்த 20ம் தேதி மாலை நடுவீரப்பட்டில் உள்ள கடை தெருவுக்கு சென்றபோது, அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென லத்தியால் அவனை தாக்கி உள்ளார்.
மேலும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மாணவனின் உடல் முழுவதும் தாக்கினார். இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால், கஞ்சா வழக்கு பதிவு செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதில் படுகாயமடைந்த மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனவே தவறு ஏதும் செய்யாத மாணவனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பள்ளி மாணவனை தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை: எஸ்பியிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.