வடலூர், மார்ச் 24: வடலூரில் துக்க நிகழ்வுக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற வாலிபரை கத்தியால் வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மேலகொளக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜகுரு(33), கூலி வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தனது பாட்டியின் துக்க நிகழ்வுக்காக மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கருங்குழி வழியாக வடலூர் சென்றபோது, கருங்குழி டாஸ்மாக் கடை எதிரே யாரோ ஒருவர் அசிங்கமாக பேசிக்கொண்டு கூச்சலிட்டு கொண்டு இருந்துள்ளார்.
அந்த சத்தத்தை கேட்டு யார் என்று பார்ப்பதற்காக ராஜகுரு சென்றபோது, கருங்குழியை சேர்ந்த கேசவபெருமாள் மகன் மூட்டைபூச்சி (எ) சம்பத்குமார்(36) என்பது தெரியவந்தது. பின்னர் சத்தம் போடுவதை பார்த்து ஏன் பிரச்னை செய்கிறீர்கள், வீட்டுக்கு போங்க என்று கூறிய ராஜகுருவை சம்பத்குமார் அசிங்கமாக திட்டி நானே பெரிய ரவுடி என்னையே போக சொல்கிறாயா என்று கூறி கத்தியால் தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில், வடலூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பு இளவழகி, எஸ்ஐ ராஜாங்கம் மற்றும் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சம்பத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் கருங்குழி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள பாலத்தில் மறைந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்று போலீசார், சம்பத்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தின் மேல் இருந்து குதித்ததில், அவரது வலது கை முறிந்தது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பத்குமார் மீது வடலூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 37 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வடலூரில் துக்க நிகழ்வுக்கு பொருள் வாங்க சென்ற வாலிபரை கத்தியால் வெட்டிய பிரபல ரவுடி கைது: போலீசிடமிருந்து தப்ப முயன்றதில் கை முறிந்தது appeared first on Dinakaran.