புதுச்சேரி, மார்ச் 21: அரசின் இடங்களை யாரும் விலைக்கு கோர முடியாது என்று சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், சுற்றுலாதுறை அமைச்சர் லஷ்மிநாராயணனை சந்தித்து விலைக்கு கேட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் லாட்டரி அதிபர் மார்ட்டீன் மகன் ஜோஸ் சார்லஸ், மூடப்பட்டிருக்கும் ஏஎப்டி பஞ்சாலையை என்னிடம் கொடுத்தால், இதனை மீண்டும் இயக்கி பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் எனக்கூறியிருக்கிறார்.
இந்த இரு விவகாரங்கள், புதுச்சேரி சட்டசபையில் நேற்று விவாதமாக மாறியது. புதுச்சேரி சட்டசபை ஜீரோ நேரத்தில் இப்பிரச்னைகளை எழுப்பி பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு பேசுகையில், ‘புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஓட்டல், மற்றும் அரசு மில்களுக்கு சொந்தமான இடங்கள் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளதால் அதனை ஒரு சிலர் விலைக்கு கேட்பது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான ஓட்டலை ஒருவர் அமைச்சரை சந்தித்து விலைக்கு கேட்டார்.
இதற்கு காரணம் அரசுக்கு சொந்தமான இடங்களை அரசு பயன்படுத்தாதுதான். புதுச்சேரியில் அரசின் இடங்கள் எல்லாம் விற்பனைக்கு வைத்துள்ளோமா? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இங்கே துளியும் இடம் இல்லை, என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வையுங்கள்’ என்றார்
நாஜிம் (திமுக): இந்த கருத்துக்கு நாங்களும் உங்களை ஆதரிக்கிறோம். இப்போதுதான் சரியாக பேசுகிறீர்கள். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘அப்படி அரசுக்கு சொந்தமான இடங்களையும், ஓட்டலையும் யாரும் விலைக்கு கேட்க முடியாது. இது பொதுமக்களுக்கு கூட தெரியும். சிலர் அவர்களது அறியாமையால் இது போல் கேட்கின்றனர். அரசு இடங்களை விற்பனை செய்ய சட்டத்தில் இடமில்லை என்பது எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் நன்கு தெரியும்’ என்றார்.
The post அரசு ஓட்டலை விலைபேசிய விவகாரம் சட்டசபையில் எதிரொலி அரசின் இடங்களை யாரும் விலைக்கு கோர முடியாது: அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம் appeared first on Dinakaran.