மரக்காணம் பகுதியில் பெய்த திடீர் கோடை மழையால் நிலத்திலேயே அழுகி வரும் தர்பூசணி பழங்கள்

மரக்காணம், மார்ச் 20: மரக்காணத்தில் திடீரென ெபய்த கோடை மழையால் நிலத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகி வருகிறது. விலையும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மரக்காணம், கந்தாடு, ஆலத்தூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், வண்டிப்பாளையம், ஓமிப்பேர், ராயநல்லூர், நகர், வடநெற்குணம், ஆலங்குப்பம் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். இந்த தர்பூசணி பழங்களில் நீர் சத்து அதிகம் உள்ளதால் கோடை காலத்தில் பொதுமக்கள் அதிக வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தர்பூசணி பழங்களை வாங்கி செல்வர்.

இதனால் கோடை காலத்தில் அறுவடை செய்யும்பொருட்டு கடந்த ஜனவரி மாதத்திலேயே இப்பகுதி விவசாயிகள் தர்பூசணி செடிகளை நடவு செய்தனர். இந்த செடிகள் நன்கு வளர்ந்து கடந்த 2 மாதங்களாக தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் சென்னை, கேரளா, புதுவை, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து ஒரு நாளில் 2 ஆயிரம் டன் வரை தர்பூசணி பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு அதிகளவில் தர்பூசணி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் அதன் விலை கடந்த வாரம் டன் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்நிலையில் கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக திடீரென பலத்த கோடை மழை பெய்தது. இந்த மழையால் தர்பூசணி பழம் வாங்கும் வெளி மாநில வியாபாரிகள் இப்பகுதிக்கு வரவில்லை. இதனால் பழுத்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த தர்பூசணி பழங்கள் நிலத்திலேயே அழுகி வருகிறது. இதனால் விலை வீழ்ச்சியடைந்து டன் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்ய குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் விலை வீழ்ச்சியடைந்து இருப்பதால் தர்பூசணி விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைந்து கவலை அடைந்துள்ளனர்.

The post மரக்காணம் பகுதியில் பெய்த திடீர் கோடை மழையால் நிலத்திலேயே அழுகி வரும் தர்பூசணி பழங்கள் appeared first on Dinakaran.

Related Stories: