திட்டக்குடி காவல்நிலையம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை

 

திட்டக்குடி, மார்ச் 24: திட்டக்குடி காவல் நிலையம் முன்பு வீட்டுமனை பிரச்னை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி தேரடி வீதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் வேல்முருகன் (48). இவரது சித்தப்பா மகள் அனிதா (40). இருவருக்கும் வீட்டுமனை பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி சர்வேயர் மூலம் மனையை அளவீடு செய்ததில் ஒரு சுவரானது இருவருக்கும் பொதுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மீண்டும் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அனிதா (40), அவரது கணவர் கணேசன் (45), அவரது மகள் ஆகிய 3 பேரும் திட்டக்குடி காவல் நிலையம் முன்பு தாங்கள் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு மனையை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீட்டு மனை பிரச்னை சம்பந்தமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திட்டக்குடி காவல்நிலையம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: