உளுந்தூர்பேட்டை, மார்ச் 24: உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரியில் இருந்து கார் ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெனிபர் (32) என்பவர் காரை ஓட்டினார். காரில் இவருடைய தந்தை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ராபர்ட்ராஜ் (64), அவரது மனைவி செல்வி (60), மருமகள் ஜெலின் (28) ஆகியோர் சென்றனர். இந்த கார் உளுந்தூர்பேட்டை அடுத்த புல்லூர் குறுக்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று விட்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தவர்களின் மற்றொரு கார், குறுக்கு ரோட்டிலிருந்து வேகமாக வந்து நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கன்னியாகுமரியில் இருந்து வந்த கார் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி குறுக்கே சென்றபோது அந்த வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒரே இடத்தில் மோதி விபத்து ஏற்பட்டதால் காரில் சென்ற ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஜான்ராபர்ட் ராஜ் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லோகித் கிருஷ்ணா (35), அவரது மனைவி வரலட்சுமி (33), திருவாரூர் ஆனந்தி (38), பிரஜன்ராஜ் (8) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்துகள் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானதால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி ஓய்வு பெற்ற எஸ்ஐ உள்பட 10 பேர் படுகாயம்: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.