நள்ளிரவில் ஆற்றில் மணல் திருட்டை தடுத்த எஸ்ஐயை தள்ளிவிட்டு தப்பியவர் அதிரடி கைது

 

காட்டுமன்னார்கோவில், மார்ச் 21: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலபருத்திகுடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரத்தில் டிராக்டர் மூலம் மணல் திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக குமராட்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், குமராட்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சசிதரன்(45) தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை நடத்தியதில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலை திருடி வந்த மேல பருத்திகுடியை சேர்ந்த கொளஞ்சி நாதன் மகன் பிரபு(38) என்பவரை மடக்கி பிடித்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் சப்-இன்ஸ்பெக்டரை தள்ளி விட்டு தப்பி சென்றுள்ளார். அப்போது அந்த இடம் இருள் சூழ்ந்து இருந்ததாலும், சம்பவம் நடந்த இடத்திற்கு தொலைவில் மற்ற போலீசார் நின்றதாலும் பிரபு சுலபமாக தப்பி சென்றுள்ளார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து குமராட்சி பொறுப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர்.

இந்நிலையில் புவனகிரி பகுதியில் பிரபு பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் புவனகிரிக்கு சென்று அங்கு உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பிரபுவை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய முயலும்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பிரபுவின் கை உடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

The post நள்ளிரவில் ஆற்றில் மணல் திருட்டை தடுத்த எஸ்ஐயை தள்ளிவிட்டு தப்பியவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: