உளுந்தூர்பேட்டை, மார்ச் 22: உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். கடலூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பண்ருட்டி அருகே சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஓட்டி சென்றார். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் வளைவில் சென்ற பஸ் ஒரு வழிச் சாலை வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி திரும்பிய போது அந்த வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆசனூரில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு விழுப்புரத்தை நோக்கி சென்ற டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பேருந்து மற்றும் லாரியின் முன் பகுதி நசுங்கி கண்ணாடிகள் உடைந்து நடுரோட்டில் நின்றது. இந்த விபத்தில் தனியார் பேருந்து டிரைவர் மணிகண்டன் மற்றும் அதில் சென்ற பயணிகள் பண்ருட்டி முஸ்தபா (49), கீழ்க்கவரப்பட்டு தீபா (49), திருநாவலூர் நூர்ஜகான் (65), ரபிதாபிவி (60), செம்மணந்தல் பர்கீஸ்பேகம் (45), கெடிலம் பஞ்சு (47), சேந்தமங்கலம் சாரங்கபாணி(68), ரமணி (33), நெய்வேலி ரமேஷ் (45), க.அலம்பலம் யோகலட்சுமி (54), கோழிப்பாக்கம் சுப்பிரமணியன் (60) உள்ளிட்ட 15கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் அஷ்ட மூர்த்தி மற்றும் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்தால் டோல்கேட் அருகில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி 15 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.