வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 3ல் மின் உற்பத்தி சோதனை ஓட்டம்: மின்வாரிய தலைவர் நேரில் ஆய்வு

மாதவரம்: வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3ல் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடங்கியது. இதனை, மின்வாரிய மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3ல் ஏற்பட்ட சிறுசிறு தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தை நேற்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். வடசென்னை அனல் மின் நிலையம்-3ல் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடையது. தற்போது சோதனை ஓட்டமாக 620 மெகாவாட் வரை மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் விரைந்து பணிகளை முடித்து சோதனை நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியும், கோடைக்கால மின் தேவையினை கருத்தில் கொண்டு தடையற்ற மின் உற்பத்தியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, வடசென்னை நிலை-2 (600 மெகாவாட்) டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணியினை நேரில் ஆய்வு செய்து, விரைவில் சரிசெய்து மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தினார். இந்த பழுது நீக்கும் பணியினை விரைந்து முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று பொறியாளர்கள் உறுதி அளித்தனர். மேலும், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் (2×660 மெகாவாட்) கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்கள்.

கட்டுமானத்தில் உள்ள சுழலி, மின்னாக்கி, கொதிகலன், வளிமகாப்பு மின் நிலையம் மற்றும் குளிருட்டும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கட்டுமான பகுதிகளை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். திட்டப் பணிகளை விரைந்து முடித்து மார்ச் 2026க்குள் மின் உற்பத்தியை தொங்க அறிவுரை வழங்கினார். இதுவரை 72 சதவீத பணிகள் முடிந்துள்ளது. ஆய்வின்போது, வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2-ன் தலைமைப் பொறியாளர் சண்முக சேதுபதி, வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-3-ன் தலைமை பொறியாளர் மணிவர்மன், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் வள்ளியம்மை, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய பாரத மிகு மின் நிறுவன பொது மேலாளர் மண்டல் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 3ல் மின் உற்பத்தி சோதனை ஓட்டம்: மின்வாரிய தலைவர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: